முகம் கண் புருவம் இடை ஆகியவைகள்

152. வண்டு சூழ்மலர் போன்றள கக்கொடி
கொண்டு சூழ்ந்தது குண்டல வாண்முகங்
1கெண்டை கண்கிள ரும்புரு வஞ்சிலை
உண்டு கொல்லென வுண்டும ருங்குலே.
 

     (இ - ள்.) குண்டல வாள்முகம் - காதணியின் ஒளிவீசப் பெற்ற சுயம்பிரபையின்
முகம்; வண்டுசூழ் மலர்போன்று - வண்டுகள் சூழப்பெற்ற செந்தாமரை மலரைப்போல;
அளகக் கொடி கொண்டுசூழ்ந்தது - கூந்தலின் ஒழுங்கினாற் சூழப்பெற்றது; கண் - கண்கள்; கெண்டை - கெண்டை மீன்களைப் போன்றன; கிளரும்புருவம் - விளங்குகிற புருவமானது; சிலை - வில்லைப்போன்றதாகும்; மருங்குல் - இடை; உண்டு கொல் என உண்டு -
உள்ளதோ இல்லையோ என்று ஐயப்படுமாறு நுட்பமானதாக விருந்தது, (எ-று.)

வண்டுகள் கூந்தலுக்குக் கருநிறத்தில் உவமம். கண்டவர் கண் களிக்கச் செய்யும் அழகில் முகத்திற்குத் தாமரை மலர் நிகராம். அளகக்கொடி - அளகவல்லி என்னுமொரு மணியணிகலனுமாம். புருவத்திற்கும் வில்லிற்கும் வளைந்த வடிவில் ஒப்புமை.
 

( 34 )