போதன நகரம் அணி செய்தல் | வேறு | 1527 | முன்வாயின் முகமெல்லா முத்தடுத்துத் தாமரை வெண் முளைகள் பாய்த்தி மின்வாய மணிக்கலசம் பொற்செந்நெற் கதிர்சூட்டி விளங்க வைத்துப் பொன் 1வாழை மரகதப்பைங் கமுகொடுதோ ரணம்வாயில் புணர நாட்டி மண்வாயிவ் வளநகரார் மணிமாலை தொடர்ந்தொலிப்ப வகுத்தா ரன்றே. | (இ - ள்.) முன் வாயில் முகம் எல்லாம் - தலை வாயிலின் முகப்புத் தோறும், முத்து அடுத்து - முத்தங்களை மணலாகப் பரப்பி, தாமரை வெண்முளைகள் பாய்த்தி - தாமரைப்பூ வடிவினவாகிய வெள்ளிய முளைப்பாலிகைகளைப் பதித்து, மின்வாய மணிக்கலசம் - ஒளியுடைய வாயமைந்த மணிகள் அழுத்திய குடங்களிலே, பொன் செந்நெல் கதிர் சூட்டி - பொன்னிறமுடைய செஞ்சாலி நெற்கதிர்களை சூட்டி, விளங்க வைத்து - திகழும்படி வைத்து, பொன்வாழை - பொன்னாலியன்ற வாழை மரங்களையும், மரகதப் பைங்கமுகொடு - மரகத மணியாலியன்ற பசிய கமுகுகளையும், தோரணம் - மாவிலைத் தோரணகம்பங்களையும், வாயில் புணர நாட்டி - அத்தலைவாயிலிலே பொருந்த நட்டு, மன்வாய் இவ்வள நகரார் - அரசன் வதிகின்ற கோநகரமாகிய இப்போதன நகரத்தே வாழும் மாந்தர்கள், மணிமாலை தொடர்ந்து - மணியாலியன்ற மாலைகளையும் தொடுத்து ஒலிப்ப - ஆரவாரமிகும்படி, வகுத்தார் அன்றே - ஒப்பனை செய்தனர், அன்று, ஏ: அசை, (எ - று.) வளநகரார், முத்தடுத்து முளைகள் பாய்த்திப், பொற்குடங்களிலே நெற்கதிர் சூட்டி விளங்கவைத்து, பொன்வாழை மரகதக் கமுகொடு தோரணம் நாட்டி, மணிமாலை தொடுத்து, ஆரவாரத்தோடே, நகரை அணி செய்தனர் என்க. | (397) | | |
|
|