திவிட்டனை நகரம் எதிர்கொள்ளல்

1528. சூழிணர்மென் மல்லிகையும் வளையமுமின்
     சூட்டுமெழி றுதையச் சூட்டி
யாழகவி மணிவண்டு மணிஞிமிறு
     மதுகரமு மிசைப்பச் செய்ய
காழகிலு நறுஞ்சாந்துங் கடிவாசப்
     பூப்பொடியுங் கமழ்ந்து கைபோய்
ஏழுலகு மணங்கொடுப்ப வெழினகரா
     ரெதிர்கொள்ள விறைவன் புக்கான்.
     (இ - ள்.) சூழ் இணர் மென் மல்லிகையும் - ஆராய்ந்தெடுத்த மெல்லிய மல்லிகை
மலரின் கொத்தாலியன்ற மாலைகளையும், வளையமும் - வளையல்களையும், மின்சூட்டும் -
மின்னும் நெற்றிப் பட்டங்களையும், எழில் துதைய - அழகு பெருக, சூட்டி - அணிந்து
கொண்டவராய், யாழ் அகவி - யாழ்இசை போலே பாடி, மணிவண்டும் - நீலமணி போன்ற
வண்டுகளும், அணிஞிமிறும் - அழகிய ஞிமிறுகளும், மதுகரமும் - மதுகரங்களும், இசைப்ப
- இசையெழுப்பி, செய்ய காழ் அகிலும் - செவ்விய நிறமுடைய அகிலிடு நறும்புகையும்,
நறுஞ்சாந்தும் - நறுமணங்கமழும் சந்தனமும், கடிவாசப்பூம் பொடியும் - மிக்கமணமுடைய
பொடிகளும், கமழ்ந்து - நறுமணம் கமழ்ந்து, கைபோய் - மிக்குச்சென்று, ஏழுலகும்
மணங்கொடுப்ப - மேலேழுலகத்தும் நாறா நிற்ப, எழில்நகரார் - அழகிய நகர்வாழ் மாந்தர்,
எதிர்கொள்ள - எதிர்கொண்டு வரவேற்ப, இறைவன் புக்கான் - மன்னனாகிய திவிட்டன்
நகரத்தே புகுவானாயினன், (எ - று.)

     வண்டும் ஞிமிறும் மதுகரமும் - தேன் வண்டுகளின் வகைகள். காழ் - வயிரமுமாம்.
மல்லிகையும் வளையலும் சூட்டும் சூட்டி அகவி இசைப்ப மணங்கொடுப்ப நகரார்
எதிர்கொள்ள நம்பி புக்கான் என்க.
(398)