1531. | செந்தாஅ மரைபுரையுஞ் செழுங்கண்ணுந் தடக்கையும் பவளவாயும் அந்தாஅ மரைநாறு மடியிணையு மவையவையே காண்மின் காண்மின் நந்தாஅ மரைநாட னகையிலங்கு மணியார நவின்ற மார்பம் பைந்தாஅ மரைமடந்தை பாராட்டப் பொலிந்திலங்கும் படியுங் காண்மின். | (இ - ள்.) செந்தாஅ மரை புரையும் - சிவந்த தாமரை மலரையே ஒப்பனவாம், செழுங்கண்ணும் - கண்ணோட்டமிக்க கண்களும், தடக்கையும் - பெரியகைகளும், பவளவாயும் - பவள நிறமுடைய திருவாயும், அந்தாமரை - அழகிய அத்தாமரை மலரையே ஒப்பன, நாறும் அடியிணையும் - நறுமணங்கமழாநின்ற திருவடியிணையும், அவையே அவை காண்மின் காண்மின் - அத்தாமரை மலர்களே அவையிற்றின் அழகைப் பாருங்கோள், நம் - நம்முடைய, தாமரை நாடன் - தாமரை மிக்க சுரமை நாட்டு வேந்தனாகிய திவிட்டனுடைய, நகையிலங்கு - ஒளி திகழ்கின்ற, மணியாரம் நவின்ற - மணிவடம் புனையப் பெற்ற, மார்பம் - மார்பானது, பைந்தாமரை மடந்தை - பசிய தாமரை மலரிலே வீற்றிருப்பவளாகிய திருமகள், பாராட்ட - புகழ்ந்து போற்ற, பொலிந்து இலங்கும்படியும் - அழகுற்று விளங்குகின்ற தன்மையையும், காண்மின் - காணுங்கோள், (எ - று.) கண்ணுக்குச் செழுமையாவது, கண்ணோட்டம் என்க. தாமரை மலரை ஒத்த கண்களையும், கையையும், வாயையும், அடியிணையையும் உடைய நம்பியின் அவயவங்களின் அழகிருந்தபடியைக் காணுங்கோள், நம்பியின் ஆரமார்பம் தாமரை மடந்தை பாராட்டுமாறு பொலிந்திலங்குதலையும் காணுங்கோள் என்றார், என்க. | (401) | | |
|
|