1533. சேதாம்பல் வீழ்ந்தனைய செவ்வாயுஞ்
     செங்குவளை திளைத்த கண்ணு
மீதார்ந்த வெண்ணிலாச் சுடரொளியும்
     வெள்ளிக்குன் றனைய தோளும்
போதார்ந்த கருங்குஞ்சி மணிதொடர்ந்தாற்
     போற்புறந்தாழ்ந் திருண்ட வாறுங்
காதார்ந்த குழைதாழக் கதிருமிழ்ந்த
     திருமுகத்தின் கதிர்ப்புங் காண்மின்.
     (இ - ள்.) சேதாம்பல் வீழ்ந்தனைய - அரக்காம்பல் மலர் சாய்ந்தாற் போன்ற,
செவ்வாயும் - சிவந்த வாயினது அழகையும், செங்குவளை திளைத்த கண்ணும் -
செங்கழுநீர் மலரை ஒத்த திருக்கண்களின் அழகையும், மீதார்ந்த வெண்ணிலாச் சுடர்
ஒளியும் - திருமேனியின் மேலே பொருந்திய வெள்ளிய நிலா வொளியை ஒத்த ஒளியின்
அழகையும், வெள்ளிக் குன்றனைய தோளும் - வெள்ளிமலையை ஒத்த தோளின்
அழகையும், போது ஆர்ந்த - மலர் பொதுளிய, கருங்குஞ்சி - கரிய தலைமயிர், மணி தொடந்தாற்போல் - நீலமணியைத் தொடக்கினாற்போலே, புறந்தாழ்ந்து - பிடரிலே
வீழ்ந்து, இருண்டவாறும் - இருண்டு தோன்றும் அழகையும், காதார்ந்த - செவிகளிலே
பொருந்திய, குழைதாழ - குண்டலங்கள் தூங்குதலாலே, கதிர் உமிழ்ந்த - அக்
குண்டலங்கள் கான்ற ஒளிதவழப்பெற்ற, திருமுகத்தின் - திருமுகத்தின், சுதிர்ப்பும் - ஒளி
அழகையும், காண்மின் - காணுங்கோள், (எ - று.)

     ஆம்பல் வாயினர்! மூத்த நம்பியின் வாயும், கண்ணும், மேனி ஒளியும், தோளும்
குஞ்சி புறந்தாழ்ந்து இருண்டவாறும், திருமுகத்தின் பொலிவும் காணுங்கோள் என்றார்,
என்க.

(403)