(இ - ள்.) வேய் காயும் - மூங்கிலைச் சினக்கின்ற, மென்பணைத் தோள் - மென்மையுடனே பருத்த தோள்களிடத்தே, வெண்சந்தனம் மெழுகி - வெள்ளிய சந்தனக் குழம்பைப் பூசி, முத்தந் தாங்கி - முத்தமாலைகளைச் சுமந்துகொண்டு, ஏகாயம் இட்ட வெண் துகிலின் மகளிர் உழை நின்று ஏத்த - உத்தரீயம் இட்டவராய், வெள்ளாடை உடுத்த ஏவன் மகளிர்கள் பக்கத்தே நின்று வாழ்த்தா நிற்ப, ஆகாயம் இயல்கின்ற - விசும்பிடத்தே இயங்குகின்ற, அருமணி நல்விமானத்தின் - பெறற்கரிய மணிகளால் ஒப்பனை செய்யப்பட்ட விமானத்தின், அகத்தாள் போலும் - உள்ளே வீற்றிருக்கின்றாள் போலும், மாகாயவரை ஆளும் - பெரிய உருவத்தையுடைய மலைகளை ஆட்சி செய்யும், மன்னர்கோன் - சக்கரவர்த்தியாகிய சடியினது, மடமகளை - இளமையுடைய மகளாகிய சுயம்பிரபையை, காண்பாம் - சென்று காண்போம், வம்மின் - தோழிகளே வாருங்கோள், (எ - று.)மூங்கிலைச் சினக்கின்ற பணைத் தோளிலே, வெண்சந்தனம் பூசி, முத்தணிந்து, உத்தரீயமிட்ட மகளிர் உழைநின் றேத்த, விமானத்தின் அகத்தேயுள்ள, வரைமன்னன் மகளாகிய சுயம்பிரபையையும், இனிக் காண்போம், வாருங்கோள்! என்றார், என்க. |