சுயம்பிரபையின் அழகு

154.

விண்ண ணங்க விழித்துவி ளங்கொளி
மண்ண ணங்குற வேவளர் வெய்திய
பெண்ண ணங்கிது தோன்றிய பின்கொலோ
1கண்ண ணங்குறு காரிகை கண்டதே.
 

     (இ - ள்.) விண் அணங்க விழித்து - விண்ணவர்கள் வருந்தும்படி நோக்கி; விளங்கு
ஒளி - தன்மேனியில் விளங்குகின்ற ஒளியாலே; மண் அணங்கு உறவே வளர்வு எய்திய -
இம்மண்ணுலகத்தவர் வருந்துமாறு வளர்ச்சியடைகின்ற; பெண் அணங்கு இது - இந்தத்
தெய்வமாது; தோன்றிய பின் கொலோ - இவ்வுலகில் பிறந்த பிறகு தானோ; கண் -
எல்லோருடைய கண்ணும்; அணங்கு உறு காரிகை கண்டது - தாம் வருந்துதற்குக்
காரணமான அழகெனும் பொருளைக் கண்டது, (எ - று.)

     மேனியொளியும் அழகும் மிக்க இந்தச் சிறந்த பெண் தோன்றிய பின்புதானோ
கண்கள் தம்மை வருத்தும் அழகெனும் பொருளைக் கண்டனவென்றதனால், இதற்கு முன்பு
இவ்வளவு அழகு நிரம்பியவரெவரும் தோன்றினாரில்லை என்றதாயிற்று. இதுவரையிலும்
உலகத்தில் தோன்றிய மகளிர் எல்லோரினும் சுயம்பிரபை மிகுந்த பேரழகுடையவள் என்க.
 

( 36 )

?@