1548. அங்கொளி விளக்கி னாலு
     மணிகலச் சுடரி னாலுந்
திங்களை யனைய செல்வி
     திருநுத லொளியி னாலு
மங்கல 1மரபிற் றல்லா
     மயங்கிருண் மறைந்து போகக்
கங்குலு மெல்ல மெல்லக்
     கையகன் றிட்ட தன்றே.
     (இ - ள்.) அங்கு ஒளி விளக்கினாலும் -அவ்விடத்தே ஏற்றப்பட்ட ஒளிமிக்க
விளக்குகளாலும், அணிகலச் சுடரினாலும் - அங்குள்ளார் அணிந்துள்ள அணிகலன்களின்
ஒளியினாலும், திங்களை அனைய - பிறையை ஒத்த, செல்வி திருநுதல் - சுயம்பிரபையின்
அழகிய நெற்றியின், ஒளியினாலும் - ஒளி பரவுதலாதும், மங்கல மரபிற்று அல்லா -
நன்மையில்லாத, மயங்கு இருள் - மயங்குதற்குக் காரணமான இருள், மறைந்து போக -
மறைந்து ஒழிய, கங்குலும் - அவ்விரவும், மெல்ல மெல்ல - பைப்பய கையகன்றிட்டது
அன்றே - கழிவதாயிற்று, அன்று, ஏ: அசைகள், (எ - று.)

     ஒளி விளக்காலும் அணிகலச் சுடராலும், செல்வியின் திருநுதல் ஒளியாலும்,
மங்கலமல்லாத இருள் அகன்றதாக, இரவும் மெல்லமெல்லக் கழிந்ததென்க.

 (418)