இதுவுமது

வேறு

1553. தேவர்க டிசைமுகங் காப்ப மாநிதி
யோவல விரண்டுநின் றொருங்கு வீழ்தர
மேவிய வருங்கலம் விளங்க நோக்கிய
காவலன் செல்வநீர்க் கடலுண் மூழ்கினான்.
     (இ - ள்.) தேவர்கள் திசைமுகம் காப்ப - தெய்வங்கள் எட்டுத் திசையிடத்தும் நின்று
காவல்புரியா நிற்ப, மாநிதி இரண்டும் நின்று - சங்கநிதி பதுமநிதி என்னும் சிறந்த நிதிகள்
இரண்டும் தன் கருவூலத்தே நிலைத்து நின்று, ஓவல ஒருங்கு வீழ் தர - ஒழிவில்லாமல்
ஒன்றுபட்டு விரும்பியவற்றை உதவா நிற்ப, மேவிய அருங்கலம் - சங்கு சக்கரம் முதலிய
பொருந்தா நின்ற அருங்கலங்கள் ஏழும் தற்சூழ்ந்து, விளங்க - திகழாநிற்ப, நோக்கிய -
இவையிற்றைக் கண்ட, காவலன் - திவிட்டநம்பி, செல்வ நீர்க் கடலுள் - செல்வமாகிய
நீரையுடைய பேரின்பக் கடலினில் , மூழ்கினான் - முழுகித் திளைத்தான், (எ - று.)

     வீழ் - பெயர் - விரும்புவன என்பது பொருளாகக் கொள்க.

     தேவர்கள் திசை காப்ப மாநிதி இரண்டும் ஒழியாதே வேண்டவன நிதி தர,
அருங்கலம் விளங்க இவையிற்றைக் கண்ட நம்பி செல்வமாகிய நீரையுடைய இன்பக்
கடலுள் மூழ்கினான் என்க.

(423)