அருகக் கடவுள் திருக்கோயில் விழாவயர்ந்து நகரம் மகிழ்தல் | 1554. | திருவமர் தாமரைச் செம்பொ னாயிதழ் மருவிய திருவடி வாமன் பொன்னகர் விரவிய விழவொடு வேள்விக் கொத்தரோ கருவிய வளநகர் கண்கு ளிர்ந்ததே. | (இ - ள்.) திருவமர் - திருமகள் விரும்புதற்குரிய, செம்பொன் ஆய்இதழ் - செவ்விய பொன்னிறமமைந்த நுணுகிய இதழ்களையுடைய, தாமரை மருவிய - தாமரை மலரிடத்தே பொருந்திய, திருவடி வாமன் - திருவடிகளையுடைய அருகபரமனுடைய, பொன்னகர் - அழகிய திருக்கோயில்களிடத்தே, விரவிய விழவொடு வேள்விக்கு ஒத்து - பொருந்திய விழாவுடனே விருந்தோம்பல் முதலிய உதவித் தொழிலிலே உளம் இயைந்து, கருவி அ வளநகர் - பல்வேறு தொகுதிகளையுடைய அந்த வளமிக்க போதனமாநகரம், கண்குளிர்ந்ததே - கண்கள் குளிர்தற்குக் காரணமான மகிழ்ச்சியை அடைந்தது, (எ - று.) நம்பியின் ஆட்சியிற்பட்ட வளநகரும் அருகபரமேட்டிக்கு விழாவெடுத்து இல்லறத்தார்க்கு உரிய வேள்வியியற்றி நன்கு மகிழ்ந்ததென்க. கண்குளிர்தற்குக் காரணமான மகிழ்ச்சியைக் காரியத்தின் மேலேற்றிக் கூறினார். வேள்வி - ஈண்டு இல்லறத்தார்க்குரிய விருந்தோம்புதலாகிய அறமென்க. . | (424) | | |
|
|