1555. | தேவரு 1மனிதர் தாமுஞ் செறிகழல் விஞ்சை யாரு மேவருந் தகைய செல்வம் விருந்துபட் டனக டோற்ற மாவர சழித்த செங்கண் மணிவண்ணன் மகிழ்ந்த காலைத் தாவருஞ் செல்வ மொன்று தலைவந்த துரைக்க லுற்றேன். | (இ - ள்.) தேவரும் மனிதர் தாமும் - தேவர்களும் மனிதர்களும், செறிகழல் விஞ்சையாரும் - வீரக்கழல்கட்டிய விச்சாதரரும், மேவு அரும் - பெறற்கரிய, தகைய செல்வம் - பெருமையுடைய செல்வங்கள், விருந்து பட்டனகள் - புதுமைமிக்கவைகளாகிய இன்பங்களை, தோற்ற - தோற்றா நிற்ப, மா அரசு அழித்த செங்கண் மணிவண்ணன் - விலங்கின் வேந்தாகிய அரிமாவைப் பிளந்து கொன்ற சிவந்த கண்ணையுடைய திவிட்டன், மகிழ்ந்த காலை - அவையிற்றை நுகர்ந்து மகிழ்ந்திருக்கும் பொழுதே, அரும் செல்வம் ஒன்று - குற்றமற்ற பெருஞ் செல்வம் ஒன்று, தலைவந்தது உரைக்கலுற்றேன் - திவிட்டநம்பிக்கு இனிதின் வந்தெய்தியதனை இனி உரைக்கத் தொடங்குகின்றேன், (எ - று.) தேவரும், மனிதரும், விச்சாதரருமாகிய எத்திறத்தாரும் எய்துதற்கரிய பெருஞ்செல்வத்தை, நம்பி எய்தி, அச்செல்வம் தனக்கியல்பாகிய புதிய புதிய இன்பத்தைத் தோற்றாநிற்ப, அவற்றை நுகர்ந்து மகிழ்ந்திருக்கும்போது, புதியதாகிய செல்வமொன்றும் அவனை வந்தெய்தியது, அதனைக் கூறலுற்றேன் எனத் தேவர் கூறினார் என்க. இது நுதலிப்புகுதல் என்னும் உத்தி, புதிய இன்பம் என்றது, காம நுகர்ச்சியை. | (425) | | |
|
|