(இ - ள்.) பால் நிலா நிறை வெண்திங்கள் - பால்போலும் வெண்ணிற முடைய நிலவொளியோடு தனது வடிவம் நிறையப் பெற்ற வெள்ளிய முழுத்திங்கள், பனிக்கதிர் பரப்பி ஆங்கு - குளிர்ந்த தனது நிலாவொளியை உலகத்திலே பரப்பினாற் போன்று, மேல்நிலா விரியும் வெள்ளி வெண் குடை - விசும்பிடத்தே நிலவொளி பரப்பும் வெள்ளை நிறமுடைய திங்கள் வெண்குடை, விசும்பு காப்ப - விண்ணோரையும் ஓம்புதல் செய்ய, கோன்இலா உலகம் ஓம்ப நிறீஇயபின் - அரசிழந்த இரத்தினபல்லவத்தைத் தலைநகராகவுடைய விச்சாதரர் உலகையும் அரசியல் அமைத்து ஓம்பும்படி நிறுவிய பின்னர், குவளை வண்ணன் - நீலோற்பலம் போலும் நிறமுடைய திவிட்டநம்பி, மான்நிலா மடக்கண் நோக்கின் மகளிர்தம் வலையிற் பட்டான் - மான்பிணையும் நாணி நில்லாது கழிதற்குக் காரணமான போரழகுடைய மடப்பம் பொருந்திய விழிகளையுடைய, மகளிர்தம் காமவலையில் சிக்கினான், (எ - று.)கோன் இலா உலகம் - அச்சுவகண்டனுடைய விஞ்சையருலகு. ஓம்பு நிறீஇ - ஓம்புதற்குரிய அரசியலமைத்து. நம்பி, தன் வெண்குடை விண்ணவரையும் ஓம்பக் கோனிலா நகரம் அரசமைத்து, ஓம்புதல் செய்த பின்னர், மடக்கணோக்கின் மகளிர் காமவலையிலே பட்டான் என்க. தன்கட்பட்டாரை உய்ந்து கரையேற விடாமையாற் காமத்தை வலை என்றார் என்க. சிறப்பொடு பூசனை முதலியன நன்கு நிகழத்துமாற்றால் வானோரையும் நம்பி குடை காத்த தென்க. |