1559.

தெய்வங்கள் செப்பி னீரெண் ணாயிரம் திசைநின் றோம்ப
மையறு மன்ன ரீரெண் ணாயிரர் வணங்க வான்மேல்
நொய்தியல் விஞ்சை வேந்தர் நூற்றொரு பதின்மர் 4தாழக்
கையமை திகிரி யானைக் காமனே கலவிக் கின்றான்.
     (இ - ள்.) தெய்வங்கள் - தேவர்கள், செப்பின் - கூறுங்கால், ஈர் எண்ணாயிரம் -
பதினாறாயிரவர், திசைநின்று ஓம்ப - எட்டுத் திசைகளினும் நிலைத்து நின்று
புறங்காப்பவும், மையறும் மன்னர் - குற்றந்தீர்ந்த அரசர்கள், ஈர் எண்ணாயிரர் வணங்க -
பதினாறாயிரவர், தன் அடிகளிலே வணங்கா நிற்பவும், வான்மேல் - விசும்பிடத்தே,
நொய்து இயல் - எளிதாய் இயங்கும் இயல்புடைய, விஞ்சை வேந்தர் - விச்சாதர மன்னர், நூற்று ஒருபதின்மர் -நூற்றுப் பதின்மர், தாழ - தனக்கடங்கி வணங்கா நிற்பவும், கைஅமை திகிரியானை -கையின்கட் பொருந்திய ஆழியை உடைய திவிட்டநம்பியை, காமனே - காமவேள் ஒருவன்மட்டுமே, கலவிக்கின்றான் - பொருது கலக்கங் காண்பானாயினன்,
(எ - று.)

     தெய்வங்கள் புறங்காப்பவும், மன்னர் வணங்கவும், விஞ்சையர் தாழவும் காமன்
மட்டுமே நம்பியைக் கலக்கங் காண்பவன் ஆயினான் என்க.

     கையமை திகிரியானை - என்றது, கையின்கட்டிகிரியுடையனாதலையும் அஞ்சாமல்
காமன் கலவிக்கின்றான் என்றொரு குறிப்புத் தோன்றக்கூறிய படியாம்.

(429)