இதுவுமது

1563. அடிகண்முன் னடித்தி யாரா
     லங்கைநீர் குளிர வூட்டி
வடிவுகொ டளிர்கண் முற்றி
     மகனென 1வளர்க்கப் பட்ட
கடிகமழ் பாரி சாத
     மதனொடோர் காம வல்லிக்
கொடிமணம் புணர்க்க லுற்ற
     குறிப்பறி நீசென் றென்றார்.
     (இ - ள்.) அடிகள் - அடிகளே, முன் அடித்தியாரால் - முன்னர்த் தேவியாராலே,
அங்கை நீர் குளிர ஊட்டி - தம் அழகிய கைகளாலே நீரைக் குளிரும்படி பெய்து பெய்து,
வடிவுகொள் தளிர்கள் முற்றி - அழகிய தளிர்ஈன்று முற்றச்செய்து, மகன் என - இது என்
மகனாம் என்று, வளர்க்கப்பட்ட - வளர்த்ததாகிய, கடிகமழ் பாரிசாதம் தன்னொடு - மணம்
கமழ்கின்ற பாரிசாத மரத்தினோடே, ஓர் காமவல்லிக்கொடி - ஒரு காமவல்லிக்
கொடியினை, மணம் புணர்க்கலுற்ற - திருமணம் புணர்த்தக் கருதியுள்ள, குறிப்பு -
தம்முடைய கருத்தினை, அறி - அடிகட்குக் கூறுவாய், நீசென்று - நீ போய், என்றார்
-என்று தேவியார் எனக்குப் பணித்தார், (எ-று.)

     பெரும்பிணா, நம்பிக்குக் கூறுவாள் :- அடித்தியார், அங்கையால் நீர் குளிரவூட்டி
மகன் என வளர்க்கப்பெற்ற பாரிசாதம் என்னும் மரத்தோடே காமவல்லிக் கொடியை மணம்
புணர்க்கக் கருதியுள்ள தம் கருத்தை அடிகட்கு அறிவிப்பாய் என எனக்குப் பணித்தார்
என்றாள் என்க. அறி - அறிவி.

 (433)