அவ் விதூடகன் இயல்பு

1565. .காதுபெய் குழையுஞ் செம்பொற்
     சுருளையுங் கலந்து மின்னப்
போதலர் குஞ்சி யாங்கோர்
     பூந்துணர் வடத்தின் வீக்கி
யோதிய மருங்கு றன்மே
     லொருகைவைத் தொருகை தன்னால்
மீதியல் வடகம் பற்றி
     வெண்ணகை 3நக்கு நின்றான்.
     (இ - ள்.) காது பெய் குழையும் - செவியிலே இடப்பட்ட குண்டலங்களும்,
செம்பொன் சுருளையும் - செம்பொன்னாற் செய்யப்பட்ட குதம்பையும், கலந்துமின்ன -
சேர்ந்து ஒளிர, போது அலர்குஞ்சி - விரிந்த மலர் செருகிய தலைமயிரினை, ஆங்குஓர்
பூந்துணர் வடத்தின் வீக்கி - அவ்விடத்தே கிடைத்த ஒரு பூங்கொத்தாலியன்ற
மாலையாலே வரிந்து, ஓதிய மருங்குல் தன்மேல் ஒருகை வைத்து - கூறப்பட்ட இடையிலே
ஒரு கையை இயைத்து, ஒருகை தன்னால் - மற்றொரு கையாலே, மீதியல் வடகம் பற்றி -
உடலின் மேலதாகிய பூம்போர்வையைப் பிடித்துக்கொண்டு, வெண்ணகை நக்கு -
வெளிற்றுச் சிரிப்புச் சிரித்து, நின்றான் - நிற்கலானான், (எ - று.)

     வெண்ணகை - பொருள்படாத வறுநகை, வடகம் - மேலாடை. ('வெள்ளைமகன்
போல் விலாவிற நக்கு') என்றார் பிறரும்.

(435)