விதூடகன் நகைக் கூத்தாடல்

1566. மூடிய புகழி னாற்கு முகிழ்நகை பயந்து காட்டுங்
கோடிய நிலையின் முன்னாற் குஞ்சித்த வடிவ னாகிப்
பாடிய சாதிப் பாடல் பாணியோ டிலயங் கொள்ள
வாடிய லெடுத்துக் கொண்டாங் கந்தண னாடு கின்றான்.
     (இ - ள்.) மூடிய புகழினாற்கு - உலகமுழுவதும் பரவி ஏனையோர் புகழ்களை
எல்லாம் மறைத்த பெரும்புகழையுடைய திவிட்டநம்பிக்கு, முகிழ்நகை பயந்து காட்டும் -
தோன்றுகின்ற நகைக்கு ஏதுவாகிய சுவையைப் பயந்து இன்பங் காட்டுகின்றதொரு, கோடிய
நிலையின் - உடலை வளைத்துக்கொண்ட நிலையினோடே, முன்னால் - முன்புறத்தே,
குஞ்சித்த வடிவன் ஆகி - சிறிது குனிந்துள்ள வடிவத்தை உடையனாய், பாடிய பாடல்
சாதிப் பாணியோடு இலயங் கொள்ள - தான் பாடாநின்ற இசைப்பாடல் சாதி என்னும் தாள
அளவையோடே பொருந்துமாறு, ஆடுஇயல் எடுத்துக்கொண்டு - கூத்தாடுகின்ற இலக்கணம்
அமைய மேற்கொண்டு, அந்தணன் - அந்தப் பிராமணன், ஆடுகின்றான் -
நகைக்கூத்தினை ஆடலானான், (எ - று.)

     சாதி - பத்து வகைத் தாள அளவைகளின் ஒன்று.

    நம்பிக்கு நகைச்சுவை தோற்றும் பொருட்டு அவ் விதூடகன், உடலை வளைத்துச்
சிறிது முன்புறத்தும் குனிந்துகொண்ட வடிவத்தோடே, பாடலைச் சாதி என்னும்
பாணியோடே இலயங்கொள்ளுமாறு பாடி, கூத்திலக்கண மமைய ஆடாநின்றான் என்க.

(436)