(இ - ள்.) வாம வாள் நெடுநோக்கி - அழகிய ஒளியுள்ள நீண்ட கண்களையுடையவளும்; மடங்கனி தூம வார்குழலாள் துவர் வாயிடை - இளமை நிரம்பப் பெற்றவளும் அகிற்புகை யூட்டப்பெற்ற நீண்ட கூந்தலையுடையவளுமாகிய சுயம்பிரபையின் சிவந்த வாயினிடத்திலே; நாமம் நல்ஒளி முள் எயிறு - புகழத்தக்க நல்ல ஒளியையுடைய முள்ளைப்போன்ற பற்கள்; உள்எழு காமன் ஆள் அரும்பில் - அவளுள்ளே எழுந்து வளருகின்ற காமன் ஆளும் ஐந்து மலர்க்கணைகளில் ஒன்றாகிய முல்லையரும்பைப் போல; கடிகொண்ட - விளக்கத்தைக் கொண்டன, (எ -று.) வாள்நெடு - வாட்படையைப்போல் நீண்ட எனினுமாம். சுயம்பிரபையின் பற்கள் முல்லையரும்புகள் போலத் தோன்றி விளங்கின என்க. நாள் அரும்பு எனப்பிரித்து புதிய அரும்புகள் என்று பொருள் கூறினும் பொருந்தும். காமன் ஆளும் அரும்புகள் பிறவும் உளவேனும் ஈண்டுத் தகுதி நோக்கி முல்லையரும்பே கொள்ளற் பாலது. |