1578. சந்து மாவொடு தடாயிட மெல்லாங்
கொந்து தேனொடு குலாயிணர் கூடி
வந்து தாழ்ந்துமது மாரி தயங்கித்
தந்து தாதுபொழி யும்பொழி றானே.
     (இ - ள்.) சந்து மாவொடு தடாய் - சந்தன மரங்கள் மாமரங்களோடே வளைந்து,
இடம்எல்லாம் - அப்பொழிலிடம் எங்கும், கொந்து தேனொடு குலாய் - கூட்டமாகிய
வண்டுகளோடே பொருந்தி, இணர்கூடி - பூங்கொத்துக்களும் தழைக் கொத்துகளும் மிக்கு,
வந்து தாழ்ந்து - வளைந்து கீழே தணிந்து, மதுமாரி தயங்கி - தேன்மழை பொழிதலாலே
விளக்கமுற்று, பொழில் தான் - அப்பொழில், தாதுதந்து பொழியும் - பூந்துகள்களை
மிகுதியும் உதிர்க்கும், தான், ஏ : அசைகள், (எ - று.)

     தடாய் - வளைந்து.
அப்பொழில் சந்தனமரமும், மாமரமும் நெருங்கி வளைந்து தேனோடு குலாய்த்
தாழ்ந்து மதுமாரி தயங்கித் தாதுக்களை மிகப் பொழியும் என்க.

(448)