சுயம்பிரபை வித்தைகளடைதல்

158. மஞ்சு தோய்வரை யாரஞ்சு மாண்பினால்
அஞ்சி லோதிநி னைப்பின கத்தவாய்
விஞ்சை தாம்பணி செய்தல் 1வி ரும்பினன்
எஞ்சி லாவகை யாலிணர் கொண்டவே.
 

     (இ - ள்.) மஞ்சுதோய் வரையார் அஞ்சும் மாண்பினால் - முகில்கள் படியப்பெற்ற
வெள்ளிமலையிடத்துள்ளவர்கள் அஞ்சும் வகையாக! விஞ்சைதாம் - வித்தைகள்; அஞ்சில்
ஓதி நினைப்பின் அகத்தவாய் - அழகிய சிலவாகிய கூந்தலையுடைய சுயம்பிரபை
எண்ணினால் அவளுடைய உள்ளத்திடத்தனவாகி; பணி செய்தல் - ஏவல்செய்தலை;
விரும்பினன் - சுவலனசடி மன்னன் நாடினான்; எஞ்சிலா வகையால் - அவ்வித்தைகள்
ஒன்றுங் குறைவில்லாமல்; இணர்கொண்ட - சுயம்பிரபையின் பால் ஒன்றாகப் பொருந்தின,
(எ - று.)

     வெள்ளிமலையில் வாழும் வித்தியாதரர் எல்லோரும் அஞ்சும்படியாகத், தன்மகள்
மாயவித்தைகள் எல்லாவற்றினும் வல்லவளாக வேண்டுமென்றும்; அவ்வித்தைகட்குரிய தெய்வங்களெல்லாம் அவள் ஏவலின்படி ஒழுக வேண்டுமென்றும், சுவலனசடியரசன்
விரும்பினான், அவன் விரும்பியபடி எல்லா வித்தைகளும் சுயம்பிரபைக்குக் கைகூடின,
ஆண் பெண் என்னும் வேறுபாடின்றி, இருபாலாரும் மாயவித்தைகளில் வல்லவர்களாக
இருத்தல் வித்தியாதரர்கட்கியல்பு.
 

( 40 )