1585. | கள்வர் தாம்பல ரெனக்கடல் வண்ணன் உள்வி ராவுநகை சேருரை கேட்டே வெள்கி வேந்தனரு கேயிரு பாலும் பள்கி நோக்குபு பயிர்த்து நடந்தான். | (இ - ள்.) கடல்வண்ணன் - திவிட்டன், கள்வர் தாம் பலர் என - இப்பொழிலிடத்தே பலர் கள்வர் உளர் என்று கூறிய, உள்விராவு நகைசேர் உரை கேட்டே - புறந்தோன்றாமல் அகத்துள்ளே நகைப்புடன் கூடிய அசதியுரையை விதூடகன் கேட்டு, வெள்கி - அஞ்சி, வேந்தன் அருகே - திவிட்டன் பக்கத்திலே நெருங்கி, இருபாலும் - இரண்டு பக்கங்களினும், பள்கி நோக்குபு - வெருவிப் பார்த்துக்கொண்டு, பயிர்த்து - மனங் கொளாதவனாய்க் கூசி, நடந்தான் - நடக்கலானான், (எ - று.) இப் பொழிலிடத்தே கள்வர் பலருளர் எனக் கேட்ட வேதியன், பெரிதும் அஞ்சியவனாய், நம்பியை அணுகி, இருபுறமும் அச்சத்துடனே பார்த்துக் கூசி நடந்தான் என்க. | (455) | | |
|
|