(இ - ள்.) தாழ் தளிர் பொதுளிய - தாழ்ந்த தழைகள் செறிந்த, தமால வீதியை - பச்சிலை மரங்களிடையே செல்லும் வழியை, ஏழை கண்டு - அறிவில் ஏழையாகிய விதூடகன் பார்த்து, இருள் என வெருள - இருள் என்று கருதி அஞ்ச, வீழ் இணர்க் கண்ணியான் - விரும்பத்தக்க பூங்கொத்துக்களால் ஆய முடிமாலையை உடைய திவிட்டமன்னன், யாவதும் சூழ் இருளன்று - எப்பொருளையும் சூழ்ந்து மறைக்கின்ற இருள் அன்று, இது சோலை காண் என - இதுவும் பூம்பொழிலே காணுதி என்று தெருட்ட, வெருவு நீக்கினான் - விதூடகன் அச்சம் தவிர்ந்தான், (எ - று.)தமாலவீதி - பச்சிலைமரச் செறிவூடே செல்லும் வழி. தமால வீதியைக் கண்டு இருள் என வேதியன் அஞ்ச, நம்பி, இது இருளன்று சோலையே காண் எனத் தெருட்ட, வேதியன் அச்சம் நீங்கினான் என்க. |