மகிழமரம் கவசமணிந்ததேன்? எனல்

1587. வாலிதழ் வீழ்தரு 1மகிழ்தன் றாண்முதற்
சாலிகை புக்கது தயங்கு தாரினாய்
சோலையு 2மமர்த்தொழி றொடங்கு மோவென
வேலைநீர் வண்ணனை வெருண்டு நோக்கினான்.
     (இ - ள்.) வால் இதழ் வீழ்தரு மகிழ் - தூயமலரை உகுக்கின்ற மகிழமரம், தன்
தாள்முதல் - தனது அடிப்பகுதியிலே, சாலிகை புக்கது - கவசம் அணிந்துளது, தயங்கு
தாரினாய் - திகழ்கின்ற மாலையை யுடையோய், சோலையும் - இதுபோன்ற பொழில்களும்,
அமர்த்தொழில் தொடங்குமோ என - போர்த்தொழில் செய்வதுண்டேயோ என்று
வினவியவாறே, வேலை நீர் வண்ணனை - கடல்வண்ணனாகிய திவிட்டனை, வெருண்டு -
உளம் வெருண்டவனாய், நோக்கினான் - பார்த்தான், (எ - று.)

     மகிழமரம் கவசம் அணிந்துளது; சோலைகளும் அரசர் போன்று போர்க்குச்
செல்லுதல் உண்டோ என, அஞ்சி நம்பியை வினவினான், என்க.

(457)