மல்லிகைமலர் சிவந்தனவாதற்குக் காரணம் கூறல் | 1590. | முள்ளரை முருக்கினோ டெழுந்த மல்லிகை வள்ளிதழ் குருதியின் வடிவி லூழ்த்தன கள்ளவிழ் கண்ணியாய் விரியு நாளெனத் 1தெள்ளிதி னதனையுந் தெளியச் செப்பினான். | (இ - ள்.) கள் அவிழ் கண்ணியாய் - தேன்துளிக்கும் முடி மாலையை உடைய பார்ப்பன மகனே, முள் அரை முருக்கினோடு எழுந்த மல்லிகை - முட்களையுடைய அடிப்பகுதியையுடைய முருக்க மரத்தோடே இணைக்கப் பட்டெழுந்த மல்லிகைக் கொடி, விரியும் நாள் - தான் மலரும் பருவத்தே, வள் இதழ் குருதியின் வடிவில் - வளப்பமுடைய தன் இதழ்கள் குருதி போன்ற சிவந்த நிறமுடையனவாய், ஊழ்த்தன - மலர்ந்தன, என - என்று, அதனையும் - சிவந்த மல்லிகை மலர்க்குரிய காரணத்தையும், தெள்ளிதின் தெளிய-தெற்றெனத் தெளிந்து கொள்ளுமாறு, செப்பினான்-கூறினான், (எ- று.) முருக்கமரத்தின் அயலிலே மல்லிகைக் கொடியை நட்டு அது சிறிது வளர்ந்தபின் முருக்கமரத்தின் அடியிலே துளையிட்டு மல்லிகைக் கொடியை அத்துளைவழிப் புகுத்தி மண்ணாற் பொதிந்து அம் முருக்க மரத்தின் மீதே பரட விட்டால் அம் மல்லிகைமலர் முருக்கமலர் போன்று சிவப்பாக இருக்கும் என்று கூறுப. | (460) | | |
|
|