திவிட்டன் வினாதலும் விதூடகன்
இச்சிலாவட்டத்தே ஒரு பூதமுளதென்றலும்

1597. யாதுகண் டனையென 3விதனுள் வாழ்வதோர்
பூதமுண் டதுபுடைத் துண்ணு மாதலால்
ஏதமுண் டிங்கினி யிருப்பின் வல்லையே
போதவென் றந்தணன் புலம்பிக் கூறினான்.
     (இ - ள்.) யாது கண்டனை என - ஏடா பார்ப்பன மகனே! ஏன் அஞ்சுகின்றாய், நீ
இப்பொழுது என்ன கண்டனை என்று திவிட்டன் வினவ, இதனுள் வாழ்வது ஓர் பூதம்
உண்டு - அரசே! இப்பளிங்கு மேடையினூடே உறைவதாகிய ஒரு பூதம் உளது, அது -
அப்பூதம், புடைத்துண்ணும் - நம்மை அடித்துக் கொன்று தின்றுவிடும், இங்கு இனி
இருப்பின் - இவ்விடத்தே யாம் இனி இருப்போமாயின், ஆதலால் - ஆகையாலே, போத -
அரசே! வருக வருக, என்று அந்தணன் புலம்பிக் கூறினான் - என்று அவ்விதூடகன்
அழுது கூறுவானானான், (எ - று.)

அவ்வாறு ஓடுகின்ற விதூடகனை, நம்பி ஏடா! பார்ப்பன மகனே! இங்கு நீ
அஞ்சுதற்கு யாது கண்டனை என, அரசே! இதனுள் ஒரு பூதம் உளது; அது நம்மை
அடித்துத் தின்றுவிடும்; ஆதலால், விரைந்துயாம் போய்விடவேண்டும்; வருதி! வருதி!
என்று புலம்பியுரைத்தான் என்க.

(467)