நம்பி அப்பூதம் எத்தகைய தெனலும்,
அதற்கு விதூடகன் விடையும்

1598. யாதத னுருவென 1வெரிபொன் னோலையும்
சோதிசூழ் சுடர்மணிக் குழையுந் துன்னிய
காதொடு கண்பிறழ்ந் துளது கைகுறி
தூதிய வயிற்றதென் றுருவ மோதினான்.
     (இ - ள்.) யாது அதன் உரு என - ஆயின் அப்பூதத்தின் உருவம் எத்தகையது
என்று திவிட்டன் வினவ, பொன்னோலையும் - பொன்னோலை யையும், சோதிசூழ்
சுடர்மணிக்குழையும் துன்னிய காதொடு - ஒளிபடர்ந்து சுடர்கின்ற குண்டலங்களையும்
பொருந்திய காதுகளோடே, கண் பிறழ்ந்து உளது - கண்கள் மருண்டு பிறழ்ந்தனவாக
உளது, கைகுறிது - குறுகிய கைகளை உடையது, ஊதிய வயிற்றது - பருத்த வயிற்றை
உடையது, என்று - என்றிவ்வாறு, உருவம் ஓதினான் - தான்கண்ட பூதத்தின் உருவத்தை
எடுத்துக் கூறினான், (எ - று.)

     நம்பி நீ கண்டபூதம் எத்தகையது என்று வினவ, பொன்னோலை யையும்
குண்டலங்களையும் உடையதாய், கண்கள் பிறழ்ந்து, குறிய கையும், ஊதிய வயிறும்
உடையது அப்பூதம் என்றான் என்க.

(468)