(இ - ள்.) மின்னிழல் பூணவன் மெல்ல நக்கு - மின்னொளி மிக்க அணிகலன்களையுடைய திவிட்டன் புன்முறுவல் கொண்டு, அது - அவ்வுருவம், நின்நிழல்காண் என - உன்னுடைய நிழலேயாம் பிறிதன்றுகாண் என்று கூற, நின்னுரை நிற்க - அரசே உன்னுடைய மொழி அமைக, என்நிழல் என்னொடும் இயங்கின் அல்லது - என்னுடைய நிழல் என்னொடு கூட இயங்குமேயன்றி, கல்உள் நிழல் புகில் காண்டல் ஆகுமே - இக்கல்லினுள் அந்நிழல் புகுமாயின் அதனை நாம் எவ்வாறு காணுதல் கூடும்? (எ - று.)அவ்வாறு நின்னாற் காணப்படும் உருவம் உன்னடைய நிழலன்றிப் பிறிதில்லை என்று நம்பிகூற, விதூடகன், அரசே! என்னிழல் ஆயின் அஃது என்னோடு இயங்குவதன்றி இக் கல்லினுள் புகுமோ! புகுந்தால் பின்னர் அதனை யாம் காணுதல் கூடுமோ! கூடாதாகலின் அது பூதமே! என்றான்; என்க. |