(இ - ள்.) வங்கவாய்ப் பவழச் செவ்வாய் வயந்த மாதிலகை என்பாள் - கடலிடத்துத் தோன்றிய பவழம்போன்ற சிவந்த வாயையுடைய வயந்த திலகை என்பவள்; நங்கையாள் வளர்ந்து - சுயம்பிரபையானவள் வளர்ந்து; காமநறுமுகை துணரவைத்து - காமமாகிய நல்ல அரும்பானது தோன்றுமாறு பொருந்தி; மங்கையாம் பிராயம் எய்தி - மங்கைப்பருவத்தை யடைந்து; வளரிய நின்ற நாளுள் - வளர்ந்துகொண்டிருக்கின்ற காலத்திலே; பைங் கண்மால் யானையாற்கு - பசிய கண்களையும் பெரிய உருவத்தையுமுடைய யானைப் படையையுடைய அரசனுக்கு; பருவம் வந்து இறுத்தது என்றாள் - இளவேனிற் காலம் வந்துவிட்டது என்று கூறினாள், (எ - று.) சுயம்பிரபை மங்கைப் பருவத்தையடைந்து வளர்ந்துகொண்டிருக்கிற காலத்தில் இளவேனிற்பருவம் வந்தது. வயந்ததிலகை என்னும் தோழி அரசனிடம் சென்று இளவேனிற் பருவம் வந்து சேர்ந்த செய்தியைத் தெரியப் படுத்தினாள். இளவேனிற் காலத்தில் அரசனும் அவனைச் சேர்ந்தோரும் பொழில் விளையாட்டயர்தல் வழக்கம், அதனை அரசனுக்கு நினைவூட்டுதற் பொருட்டு வயந்ததிலகை அச்செய்தியை அரசனுக்குத் தெரிவிக்கின்றாள் வங்கம்: ஆகுபெயர்; கடல். யானை யான் - சடிமன்னன். |