கோப்பெருந்தேவி யப்பூம்பொழி லடைதல்

வேறு

1602. மின்னவிர் விளங்குமணி மேகலை நிழற்றப்
பொன்னவிர் சிலம்பொலி 1பெயர்ந்துபுடை சாற்றக்
கன்னியர் நிரந்துபலர் காவலொடு சூழ
அன்னமென வந்தரசி யார்பொழி 2லடைந்தாள்.
     (இ - ள்.) மின் அவிர் விளங்கும் மணிமேகலை நிழற்ற - மின்னல் விரிந்து
திகழ்கின்ற மணிமேகலை அணி ஒளிபரப்பவும், பொன் அவிர் சிலம்பு ஒலி பெயர்ந்து புடை
சாற்ற - அழகு திகழ்கின்ற சிலம்பணி ஒலித்துப் பக்கத்தே ஆரவாரிப்பவும், கன்னியர் பலர்
நிரந்து காவலொடு சூழ - உழைக்கல மகளிர் பலர் நெருங்கிப் புறங்காப்பாராய்த் தன்னைச்
சூழ்ந்து வரவும், அரசி - கோப்பெருந்தேவியாகிய சுயம்பிரபை, அன்னம் என வந்து -
அன்னப் புட்போன்று நடந்து வந்து, ஆர்பொழில் அடைந்தாள் - பொருந்திய
அப்பொழிலை எய்தினாள், (எ - று.)

     அவ்வமயத்தே, கோப்பெருந்தேவி நிழற்றவும், புடைசாற்றவும், சூழவும், அன்னமென
வந்து, அப்பொழிலை அடைந்தாள் என்க.

 (472)