சுயம்பிரபை வித்தையால் தன்னுருக்கரந்து நிற்றல்

1603. மாலையமர் சிந்தையொடு வார்பொழின் மருங்கின்
வேலையமர் கண்ணிவிளை யாடுதல் விரும்பி
3மேலையமர் விஞ்சையின் மறைந்துவிரை நாறும்
சோலையமர் தோகையென வேதொழுது நின்றாள்.
     (இ - ள்.) மாலை அமர் சிந்தையொடு - திருமாலாகிய திவிட்ட நம்பியைப் பெரிதும்
விழைந்த உள்ளத்தோடே, வார்பொழில் மருங்கின் - நீண்ட அப்பூம்பொழி லிடத்தே,
வேலை அமர்கண்ணி - வேல்போன்ற கண்களையுடைய அச்சுயம்பிரபை, விளையாடுதல்
விரும்பி - ஒரு விளையாட்டைச் செய்ய எண்ணி, மேலை அமர் விஞ்சையின் மறைந்து -
தான் முன்னர் விரும்பிப் பயின்றதொரு வித்தையாலே தன் உருக்கரந்து, விரை நாறும்
சோலை அமர் தோகை எனவே - மணங்கமழும் பூம் பொழிலிலே உரையுமொரு மயில்
போன்று, தொழுது நின்றாள் - திவிட்டனை வணங்கி ஒரு சார் அவனறியாதே
நிற்பாளாயினள், (எ - று.)

     திவிட்டன் தன்னைக் காணானாகவும், அவனைத் தொழுது நிற்றல் அவளது
கற்புடைமையின் பெருமையை விளக்கும்.

     “தெய்வம் தொழாஅள் கணவற் றொழுதெழுவாள்“ என்புழியும் கணவன் உறங்கும்
பொழுதும் அவனைத் தொழுதல் என்றமை காண்க.

     மாலை - திருமாலாகிய திவிட்டனை. மாலை - மால் எனினுமாம். ஐகாரம் சாரியை
என்க. வேலை - கடலுமாம். அமர் சிந்தை : வினைத் தொகை. அவ்விடத்தே வந்த தேவி
திவிட்டனை அசதியாடல் கருதி வித்தையாலே உருக் கரந்து கைதொழுது நின்றாள் என்க.

(473)