நம்பியின் பணிமொழியும் நங்கையின் சினமும் | 1610. | மன்னன்மக ளேமகர வார்குழன்ம டந்தாய் அன்னமனை யாயமிர்தின் மேலுமமிர் தொப்பாய் என்னையிவ 1ணுற்றதென வென்னுமிலை யென்னா முன்னுபுரு வக்கொடி முரிந்துமுனி வுற்றான். | இதுவும் அடுத்த செய்யுளும் குளகம் (இ - ள்.) மன்னன் மகளே - வேந்தன் குலமகளே, மகரம் வார்குழல் மடந்தாய் - தோளணியுடன் பொருந்தி நீண்ட அளகமுடைய அணங்கே, அன்னம் அனையாய் - அன்னம் போன்றவளே, அமிர்தின் மேலும் அமிர்து ஒப்பாய் - அமிழ்தத்திற்கும் அமிழ்தம் போல்வாய், என்னை யிவண் உற்றது - இவ்விடத்தே எய்தியது யாதோ, என - என்று வினவ, “என்னும் இலை“ - ஒன்றுமில்லை, என்னா - என்று விரைந்து மறுமொழி கூறி, முன்னு புருவக்கொடி முரிந்து - ஆராய்தற்குரிய அழகிய புருவங்களாகிய கொடிகள் வளைந்து நெற்றியில் ஏற, முனிவுற்றாள் - சினந்தனளாய், (எ - று.) அவ்வாறு நின்ற நம்பி தேவியின் நலம் பாராட்டுதல் வாயிலாய் ஊடல் தீர்க்கப்புகுவான், மன்னன்மகளே! மடந்தாய்! அன்னமனையாய்! அமிர்தின் அமிர்தே! இவ்விடத்தே உற்றது யாதோ? என் வினாவ, தேவி ஒன்றுமிலை என்று மேலும் முனிவுற்றாளாய் என்க. இச் செய்யுளின்பின் 1606 ஆம் செய்யுளே மீண்டும் சில பிரதிகளிற் காணப்படுகின்றது. அதற்குத் திவிட்டன் கூற்றையே அவன் கூற்றாகவே சுயம்பிரபை எடுத்துக்கூறி அவன் குற்றத்தைப் புலப்படுத்தினாள் என்க. | (480) | | |
|
|