(இ - ள்.) மற்று அ நெடுமால் - அத்திவிட்டன், மகர மாமுடி வணங்க - மகரப் பூண் புனைந்த முடிவணங்கா நிற்ப, தவப் பெரிது கைதவமும் கற்றனை என்ன - அதுகண்ட சுயம்பிரபை நீ மிகப் பெரிய வஞ்சனையும் கற்றுள்ளனை என்று கூற, உணர்ந்து உற்றதொர் பிழைப்பு உடையன் ஆய்விடின் - அதுகேட்ட நம்பி ஆராய்ந்து காணுமிடத்து யான் ஏதானும் ஒரு சிறிய குற்றமுடையேனாய்க் காணப்பட்டாலும், முற்றமுறை செய்தருளு - முழுதும் என்னை ஒறுத்தருள்க, மொய் குழலி - செறிந்த அளகமுடையோய், என்றான் - என்று வேண்டினன், (எ - று.)தேவி, வணங்கிய நம்பியை நோக்கி, மிகக் கைதவமும் கற்றுள்ளாய் என, தேவி! நீ ஆராய்ந்து, என்பாற் கைதவம் கண்டனையாயின் அதற்குத் தக என்னை ஒறுக்கக் கடவை என்றான் என்க. |