(இ - ள்.) இட்ட தளை தம்மொடு - காலிலே இடப்பட்ட மாலையாகிய விலங்கோடே, தோளும் இடைவீக்கிக் கட்டி விடு பூம்பிணையல் - இரண்டு கைகள் இடையேயும் இறுகக் கட்டப்பட்ட பூமாலையாகிய தளையையும், கைவிடலும் - உழைக்கல மகளிர்கள் தேவியின் குறிப்பறிந்து அகற்றி விட்டவுடனே, மெய்யுள் ஒட்டிவிடு காதலொடு- உடலோடே ஒட்டிவிடுவதைப் போன்றதோர் அன்புடைமையோடே, வந்து - தேவியின் முன்னர் வந்து, உருவுகொண்டு - கோலங்கொண்டு, பட்ட பல பாடலினோடு ஆடல்பல செய்தான் - சுவைபட்ட பலவாகிய இசைப்பாட்டைப் பாடுதலோடே பலவேறு கூத்துக்களையும் ஆடலானான், (எ - று.)நங்கையின் குறிப்பறிந்து, உழைக்கல மகளிர் மாலையாகிய தளையை விட்டனராக, விதூடகனும், அன்போடே தேவி முன்னர் வந்து, கோலங் கொண்டு பாடலோடே ஆடல் செய்தான் என்க. |