பாரிசாத காமவல்லி திருமணம்

வேறு

1621. இன்னன பாடி யாட 2வீர்ங்கனி பலவுங் கூவி
முன்னவ னார வூட்டி முறுவலோ டமர்ந்த பின்னை
மன்னிய பாரி சாத மணமக னாக நாட்டிக்
கன்னியங் காம வல்லி கடிவினை தொடங்க லுற்றார்.
     இதுமுதல் 8 செய்யுள் ஒரு தொடர்
     பாரிசாத காமவல்லி மணம் உரைப்பன

     (இ - ள்.) இன்னன - இவை போல்வன பலவும், பாடி ஆட - பாடிக் கொண்டு
அவ்விதூடகன் கூத்தாடுதல் செய்ய, ஈர்ங்கனி பலவும் - தேவி ஈரிய கனிகள் பலவற்றையும்,
கூவி - வரவழைத்து, முன்னவன் - பார்ப்பன னாகிய அவ்விதூடகன், ஆர ஊட்டி -
ஆசைதீர உண்ணும்படி செய்து, முறுவலோடு - அவன் அவாவுடன் உண்ணுதலை நோக்கிப்
புன்முறுவலுடன், அமர்ந்த பின்னை - அங்கு வீற்றிருந்த பின்னர்,

     மன்னிய பாரிசாதம் - நிலைபெற்ற பாரிசாத மரத்தை, மணமகனாக நாட்டி -
மணமகனாக வைத்து, அங்காமவல்லி கன்னி நாட்டி - அழகிய காமவல்லியை மணமகளாக
வைத்து, கடிவினை தொடங்கலுற்றார் - அத்திருமண மக்கட்குத் திருமண விழா நிகழ்த்தத்
தொடங்கினார், (எ - று.)

முன்னவன் - முதல் வகுப்பினனாகிய பார்ப்பனன் என்க.

     விதூடகன் இவ்வாறு பல பாடலைப் பாடி ஆட, தேவி கனிபல தருவித்து ஊட்ட
முறுவலோடமர்ந்த பின்னர், பாரிசாத காமவல்லி மணவிழாத் தொடங்கினர் என்க.

 (491)