1622. | திருமணி நிழற்றுஞ் செம்பொற் றிலதமா முடியி னானுங் குருமணிக் கொம்ப ரன்ன கொழுங்கய னெடுங்க ணாளும் பருமணி பதித்த பைம்பொன் வேதிகைப் பாரி சாதம் அருமணி 1யரும்பித் தாழ்ந்த வந்தளிர்ப் பொதும்பர் சார்ந்தார். | (இ - ள்.) திருமணி நிழற்றும் - உயரிய மணிகள் ஒளிரும், செம்பொன் திலதம் மா முடியினானும் - செவ்விய பொன்னாலியன்ற மாண்பு மிக்க பெரிய முடியை உடைய திவிட்டநம்பியும், குருமணி கொம்பர் அன்ன - நிறமமைந்த பவளப் பூங்கொம்பு போன்ற, கொழுங்கயல் நெடுங் கண்ணாளும் - கொழுவியநீண்ட கயல் மீன் போன்ற கண்ணையுடைய சுயம்பிரபையும், பருமணி பதித்த பைம்பொன் வேதிகை பாரிசாதம் - பரிய மணிகள் பதித்துப் பசிய பொன்னாலே மேடை அமைக்கப்பட்ட பாரிசாத மரம், அருமணி அரும்பித் தாழ்ந்த - அரிய மணிகளைப்போல அரும் பெடுத்துத் தழைத்துள்ள, அந்தளிர் பொதும்பர் - அழகிய தளிர்மிக்க பூம்பொழிலை, சார்ந்தார் - எய்தினார், (எ - று.) முடியினானும், நெடுங்கணாளும் பாரிசாதம் அரும்பெடுத்துத் தழைத்துள்ள பூம்பொழிலை எய்தினர், என்க. | (492) | | |
|
|