1625. குடங்கையி னகன்று நீண்டு குவளையின் பிணையல் செற்று
மடங்களி மதர்வைச் செங்கண் மான்பிணை மருட்டி மையால்
புடங்கலந் திருள்பட் டுள்ளாற் செவ்வரி 1பொதிந்த வாட்கண்
இடங்கழி மகளிர் சூழ விந்திர னிருந்த தொத்தான்.
     (இ - ள்.) குடங்கையின் அகன்று - உள்ளங்கையின் அளவிற்றாய் விரிந்து, நீண்டு -
நீளிதாய், குவளையின் பிணையல் செற்று - நீலோற்பல மாலையைச் சினந்து, மடங்களி
மதர்வைச் செங்கண் - மடப்பத்தோடு களித்த சிவந்த கண்களையுடைய, மான்பிணை
மருட்டி - பெண்மானை அச்சுறுத்தி, மையால் - மையூட்டப் பெற்றமையால், புடங்கலந்து
இருள் பட்டு - பக்க மெங்கும் பரவி இருளச்செய்து, உள்ளால் - அகத்தே, செவ்வரி
பொதிந்த வாள்கண் - செவ்விய வரிகள் படர்ந்த வாள்போலும் கண்களை உடைய,
இடங்கழி மகளிர் - காமமிகுதியை உடைய மகளிர்கள், சூழ - தன்னைச் சூழ்ந்துமொய்க்க,
இந்திரன் இருந்தது ஒத்தான் - தேவேந்திரன் வீற்றிருந்ததை ஒத்து விளங்கினான்,
(எ - று.)

     அகன்று, நீண்டு, பிணையல் செற்று. பிணைமருட்டி, இருள்பட்டு, உள்ளாற் செவ்வரி
பொதிந்த வாட்கண், மகளிர் சூழ இருந்த நம்பி, இந்திரன் அரம்பையர் சூழ இருந்ததனை
ஒத்தான் என்க. இடங்கழி - கழிபெருங் காமம்.

     மடங்களி மதர்வைச் செங்கண் என்பன மான்பிணைக்கு அடை மொழிகள்.
பிணையல் செற்று பிணைமருட்டி இருள்பட்டுப் பொதிந்த வாட்கண் என்க. புடம் - பக்கம்.

(495)