காமவல்லி மணமகளை ஒப்பனை செய்தல்

1628. கன்னியங் காம வல்லிக்
     கனங்குழை மடந்தை தன்னை
மன்னவன் றேவி மார்கண்
     மணவினைக் கோலஞ் செய்து
பின்னத னோடு சேர்த்திப்
     பெருகிய களிய ரானார்
இன்னகைப் புதல்வர் செல்வம்
     யாவரே யினிதென் னாதார்.
     (இ - ள்.) கன்னி அம் காமவல்லி - கன்னிமையுடைய அழகிய காமவல்லி என்னும்,
கனங்குழை - கனவிய குழையினையுடைய, மடந்தை தன்னை - நங்கையை, மன்னவன்
தேவிமார்கள் - திவிட்டனுடைய மனைவிமார்கள், மணவினைக் கோலம்செய்து -
திருமணவினைக்குரிய ஒப்பனை பலவும் செய்து, பின் அதனோடு சேர்த்தி - பின்னர்
அப்பாரிசாத மணமகனோடு கூட்டி, பெருகிய களியர் ஆனார் - மிக்க மகிழ்ச்சியுடையர்
ஆயினார், இன் நகை புதல்வர் செல்வம் - இனிய முறுவலையுடைய மகார்கள் செல்வம்
எய்துதலை, யாவரே இனிது என்னாதார் - யார் தாம் இனிதாகக் கருதாதார் உளர், (எ - று.)

புதல்வர் செல்வம் - புதல்வர்கள் எய்தும் செல்வம், புதல்வராகிய செல்வ
மெனினுமாம்.

     பாரிசாதத்தை ஒப்பனை செய்த மகளிர், காமவல்லிக் கன்னியையும் கோலஞ் செய்து
அதனோடே புணர்த்திப் பெரிதும்  மகிழ்வாராயினர்; புதல்வர் செல்வத்தை
யாரே இனிதென்று மகிழாதார் என்க.

 (498)