குராவம்பாவை கொண்டு பாராட்டல்

1633. விரவம்பூந் தளிரும் போது
     2மிடைந்தன மிலைச்சு வாரும்
அரவம்பூஞ் சிலம்பு செய்ய
     வந்தளிர் முறிகொய் வாரு
மரவம்பூங் கவரி யேந்தி
     மணிவண்டு மருங்கு சேர்த்திக்
குரவம்பூம் பாவை கொண்டு
     3குழவியோ லுறுத்து வாரும்.
     (இ - ள்.) விரவு அம் பூந்தளிரும் போதும் மிடைந்தன மிலைச்சு வாரும் -
கலந்துள்ள அழகுமிக்க இளந்தளிர்களையும் மலர்களையும் கொண்டு செறியப்புனைந்த
மாலைகளைத் தம் தலையிலே சூடுவார்களும், பூஞ்சிலம்பு அரவம் செய்ய - அழகிய தம்
சிலம்புகள் ஒலிப்ப, அந்தளிர் - அழகியவாய்த் தளிர்க்கின்ற,

     முறிகொய்வாரும் - தளிர்களைக் கொய்வார் களும், மரவம் பூங்கவரி ஏந்தி -
வெண்கடப்ப மலர்களாகிய கவரிகளை ஏந்திக்கொண்டு, மணிவண்டு மருங்குசேர்த்தி -
மாணிக்க வளையல்களைப் பக்கத்திலே செறித்து, குரவம் பூம்பாவை - குராமலராகிய
பாவைகளைக் கைக்கொண்டு, குழவி யோல் உறுத்துவாரும் - தம் குழவிகளைத்
தாலாட்டுதல் போலே தாலாட்டுவாரும், (எ - று.)

     ஓலுறுத்தல் - தாலாட்டுதல்.

     குராமரத்தின் மலர் குழவிபோலிருந்தலின் அதனைக் குழவியெனக் கொண்டு மகளிர்
ஆடுதல் மரபு என்க.

     மலைச்சுவாரும் கொய்வாரும் ஏந்தி, சேர்த்தி கொண்டு ஓலுறுத்து வாரும் ஆயினர்
என்க.

 (503)