1634. பாவையும் விலங்கு சாதிப்
     படிமமும் 1பறப்பை தாமும்
கோவையு முகத்து மாக்கிக்
     குலவிய விதழ தாக
ஓவியர் புனைந்த போலு
     மொளிமலர்ப் பிணையன் மாலை
தேவியர் மருளச் செய்து
     சிகழிகை சேர்த்து வாரும்.
     (இ - ள்.) பாவையும் - பதுமைகளைப் போன்றும், விலங்கு சாதிப் படிமமும் -
யானை முதலிய விலங்குகளின் உருவம் போன்றும், பறப்பை தாமும் - பறவைகளைப்
போன்றும், கோவையும் முகத்தும் ஆக்கி - தொண்டையலிலும் முகப்புக்களினும் இயற்றி,
குலவிய இதழதாக - பொருந்திய மலர்களையுடையதாக, ஒவியர் புனைந்த போலும் -
சித்திரக்காரர் களால் வரையப்பட்டவற்றை ஒத்த, ஒளிமலர்ப் பிணையன்மாலை -
ஒளியுடைய மலர்களால் இயன்ற பிணையலாகிய மாலைகள், தேவியர் மருளச்செய்து -
பெருந்தேவியார் வியக்கும்படி புனைந்து, சிகழிகை சேர்த்துவாரும் - அவரது
கொண்டையிலே சூட்டுவாரும், (எ - று.)

     பதுமை போலவும், விலங்குகள் பறவைகள் போலவும், மலரால் உருவமைய
மாலைபுனைந்து சூடுதல் பண்டைய மரபு. இதனை,

    “அத்தி ஆளியோடு ஆமான் அட்டமங்கலம் அரிய
    பத்தி பாவைபல் பறவை பயில்கொடி திமிசொடு பிறவும்
    வித்தகம் பெரிதுடைய விசித்திர உருவம் நன்மலரால்
    சித்த நன்னெறி பயந்தான் திருவடிக் கருச்சனைசெய்தாள்“

     (நீல - குண்டலகே - செய் - 1052.) என்னும் நீலகேசிச் செய்யுளானும் உணர்க.
பறப்பை - பறவை. பாவை முதலிய வடிவினவாகப் புனைந்து பெருந்தேவியின்
சிகையிலே சூட்டுவாருமாய் என்க.

(504)