1635. அருமலர்த் தழையும் போது
     மடியுறை யாக வேந்திக்
திருமலர்ப் பாவை யன்ன
     தேவியைச் செவ்வி காண்பார்
உருமல ரிழைத்த பாவை
     யொளிமண நயந்து மாதோ
குருமலர்க் கொம்பி னொல்கிக்
     குரவையின் 1மயங்கு வாரும்.
     (இ - ள்.) அருமலர் போதும் தழையும் அடியுறையாக ஏந்தி - மலர்ந்த அரிய
மலர்களையும் தழைகளையும் அடிக்காணிக்கையாகக்கொண்டு, திருமலர்ப்பாவை அன்ன
தேவியை - அழகிய செந்தாமரை மலரிலே வீற்றிருக்கும் திருமகளை ஒத்த சுயம்பிரபையை,
செவ்வி காண்பார் - அமயமறிந்து கண்டுமகிழ்வாரும், உருமலர் இழைத்த பாவை - அழகிய
மலராலே இயற்றிய பதுமையின், ஒளி மணம் நயந்து - ஒளியையும் நறுமணத்தையும்
விரும்பியவராய், (மாதோ) குருமலர்க் கொம்பின் ஒல்கி - நிறமமைந்த பூங்கொம்புபோலத்
துவண்டு, குரவையின் மயங்கி நிற்பார் - குரவைக் கூத்தின்கட் பொருந்துவாரும், (எ - று.)

     தழையும் போதும் அடியுறையாக ஏந்தித் தேவியைச் செவ்வி காண்பாரும்
மலராலிழைத்த பாவையின் ஒளியையும் மணத்தையும் நயந்து ஒல்கிக் குரவைக்
கூத்தாடுவாருமாய் என்க.

(505)