மகளிர் ஓவியந்தீட்டும் மாண்பு | 1637. | வட்டிகைப் பலகை தன்மேல் மணிவண்ணன் வடிவு தீட்டி ஒட்டிய வடிவிற் றம்மை யூடலோ டிருப்பக் கீறித் திட்டமிட் டுருவ நுண்ணூற் றுகிலிகை தெளிர்ப்ப வாங்கிப் பட்டமுங் குழையுந் தோடும் பையவே கனிவிப் பாரும். | (இ - ள்.) வட்டிகைப்பலகை தன்மேல் - ஓவியப்பலகையின் மிசை, மணிவண்ணன் வடிவு தீட்டி - நீலமணியின் நிறமுடைய திவிட்டனுடைய உருவத்தை வரைந்து, ஒட்டிய வடிவில் - அவ்வோவியத்தின் அணித்தாய உருவிலே, தம்மை - தங்கள் உருவத்தை, ஊடலோடு இருப்பக் கீறி - ஊடியிருப்பவரைப்போல வரைந்து, திட்டமிட்டு - வரையறை செய்துகொண்டு, உருவ நுண்ணூல் - ஓவியத்தை விளக்கும் நுணுகிய நூன் முறையாலே, துகிலிகை தெளிர்ப்ப வாங்கி - தூரியக் கோல் கொண்டு விளக்கி, பட்டமும் குழையும் தோடும் - நுதற்பட்டமும் குண்டலமும் தோடுமாகிய அணிகலனின் ஓவியங்களை, பையவே - மெல்ல மெல்ல, கனிவிப்பாரும் - வண்ணங்களாலே விளக்கஞ் செய்வாரும், (எ - று.) வட்டிகைப் பலகை - ஓவியந்தீட்டற்குரிய பலகை. துகிலிகை - எழுதுகோல். உருவ நுண்ணூல் - நுணுகிய ஓவிய நூல் தெளிர்ப்ப வாங்கி : ஒருசொல் நீர்மைத்து, விளக்கி. கனிவித்தல் - விளங்குதல். வட்டிகைப் பலகையின்மிசை திவிட்டநம்பியின் உருவம் வரைந்து அதனருகே தாம் ஊடலோடிருப்பார் போன்று தம் வடிவினையும் வரைந்து பின்னர்த் துகிலிகைகொண்டு நுண்ணிய வண்ண முதலிய தீட்டி விளக்கஞ் செய்வாரும் என்க. இச் செய்யுள், நந்தமிழ்நாட்டின் பண்டைநாள் ஓவியக்கலையின் மாண்பினை அறியப் போதிய சான்றாதல்காண்க. | (507) | | |
|
|