ஊசலாடல்

1639. கோதையுங் குழைவின் பட்டின்
     கொய்சகத் தலையுந் தாழ
மாதர்வண் டொருங்கு பேர
     மழையிடை நுடங்கு மின்போல்
போதலர் பொதும்பிற் றாழ்ந்த
     பொன்னெழி லூச றன்மேல்
ஓதநீர் வண்ணற் பாடி
     3நூழிலூ ழியங்கு வாரும்.
     (இ - ள்.) கோதையும் - மலர்மாலையும், குழைவு இன்பட்டின் கொய்சகம் தலையும் -
குழைவுடைய இனிய பட்டினது கொய்சகத்தலைப்பும் தாழ - தூங்காநிற்ப, மாதர்வண்டு -
அழகிய வண்டுகள், ஒருங்குபேர - ஒருங்கே அகல, மழையிடை நுடங்கும் மின்போல் -
முகிலிடத்தே தவழ்கின்ற மின்னற்கொடி போன்று, போது அலர் பொதும்பில் - மலர்கள்
விரிந்த பொழிலினூடே, தாழ்ந்த - தூங்காநின்ற, பொன்எழில் நூழில் ஊசல் தன்மேல் -
பேரழகுடைய நூழிற்கொடியாலாய ஊசலின்கண் அமர்ந்து, ஓத நீர் வண்ணற் பாடி - கடல்
வண்ணனாகிய திவிட்டன் புகழைப் பாடி, ஊழ் - முறையாக, இயங்குவாரும் -
ஆடுகின்றவரும், (எ - று.)

     நூழிற் பொன்னூசல் என இயைக்க. நூழில் - நூழிற்கொடி.

     கோதையும், கொய்சகத் தலையும் தாழ, வண்டு ஒருங்கு பேர மழையிடை நுடங்கு
மின்போல், பொழிலிடத்தே ஊசலேறி, நம்பியின் புகழ்பாடி, முறையாக ஆடுவாரும் என்க.
இச் செய்யுள் ஊசலாடும் மகளிரைக் கற்போருளத்தே நன்கு ஓவியம் போலே காட்டும்
அருமையை நோக்குக.

(509)