தீயிடத்துக்கரியைப்போல மலரிடத்திலே
வண்டுகள் காணப்பெறல்
164. அஞ்சுடர் முருக்கி னங்கே ழணிமல ரணிந்து கொம்பர்த்
துஞ்சிடை பெறாது தும்பி துவன்றிமேற் றுகைக்குந் தோற்றம்
செஞ்சுட ரிலங்குஞ் செந்தீக் கருஞ்சுடர்க் கந்துள் சிந்தி
மஞ்சுடை மயங்கு கானம் 2மண்டிய வகையிற் றன்றே.
     (இ - ள்.) அம்சுடர் முருக்கின் - அழகிய தளிர்களையுடைய பலாச மரத்தினது; அம்
கேழ் அணிமலர் - அழகிய நிறத்தையுடைய சிறந்த மலர்கள்; கொம்பர் - மரக்கிளைகளில்;
அணிந்து - வரிசை வரிசையாகத் தோன்றி; துஞ்சு இடை பெறாது தும்பி துவன்றி
மேல்துகைக்கும் - தங்குதற்கு இடம் பெறாமையால் வண்டுகள் நிறைந்து மேலே தங்
கால்களால் துகைக்கப் பெறுகின்ற; தோற்றம் - காட்சியானது; செம்சுடர் இலங்கும் செந்தீ -
செவ் வொளி விளங்கும் நெருப்பானது; கருஞ்சுடர்க் கந்துள் சிந்தி - கருநிறமுள்ள
கரிகளைச் சிதறிக் கொண்டு; மஞ்சு உடை மயங்கு கானம் மண்டிய - உயர்ச்சியால்
முகில்களைச் சிதறச்செய்கின்ற அடர்ந்த காட்டினிடத்திலே பற்றிய - வகையிற்று -
தன்மையைப் போன்றது. (எ - று.) அன்றே: ஈற்றசை.

     செந்நிறம் உள்ள பலாச மலர்கள் அம்மரத்தின் கிளைகள் நிறையப் பூத்து மேலே
வண்டுகள் மிகுதியாக மொய்க்கப்பெறுகின்ற தோற்றமானது, சிவந்த நெருப்பு, காட்டில்பற்றிக்
கரிகளைச் சிதறினாற் போன்றதென்பதாம். பலாசமலர்க்குத் தீயும் வண்டுக்குக் கரியும்
வண்ணத்தில் ஒப்பு. இதனை வண்ண உவமம் என்பர். கந்துள் - கரி.
 

( 46 )