வாழைக் குருத்தில் உகிரால் ஓவியங் கிள்ளல்

1640. கள்ளுமிழ்த் துயிர்க்குஞ் சோலைக்
     1கனமடற் குமரி வாழை
உள்ளெழு சுருளை வாங்கி
     யொளியுகிர் நுதியி னூன்றிப்
புள்ளெழு தடமும் போர்மான்
     றொழுதியு மிதுன மாய
ஓள்ளெழி 2லுருவுங் கிள்ளி
     யுழையவர்க் கருளு வாரும்.
     (இ - ள்.) கள் உமிழ்ந்து உயிர்க்கும் சோலை - தேன் துளித்து நறுமணங்கமழும்
அப்பொழிலிடத்தே, கனமடல் குமரி வாழை - கனவிய மடல்வாய்ந்த ஈனாத வாழையின்,
உள் எழு சுருளை வாங்கி - உள்ளே புதுவதாய் எழாநின்ற சுருளாகிய குருத்திலையை
அரிந்தெடுத்து, ஒளிஉகிர் நுதியின் ஊன்றி - ஒளியுடைய தம் நகத்தின் நுனியாலே
அழுத்தி, புள் எழுதடமும் - பறவைகள் எழாநின்ற குளங்களைப்போன்றும், போர்மான்
தொழுதியும் - தம்முட் போரிடுகின்ற சிங்கக் குழாம்போன்றும், மிதுனம் ஆய -
இணையாகிய, ஒள்ளெழில் உருவும் - ஒளியுடைய அழகிய பறவை யுருவங்கள் போன்றும்,
கிள்ளி - உருவமையக் கிள்ளி, உழையவர்க்கு - தம் தோழிமார்க்கு, அருளுவாரும் -
வழங்குவாரும், (எ - று.)

     தேவியர் கனவிய வாழை மடலகத்தை உள்ள வாழைக்குருத்தினை வாங்கி விரித்து
அதன்கண் தம் நகத்தாலே ஊன்றி தடமும் மான்றொழுதியும் மிதுனமும் போன்று
உருவங்கிள்ளித் தம் தோழியர்க்குக் கொடுப்பாரும் என்க.

     போர் மான்தொழுதி - போரிடுகின்ற மான் கூட்டமுமாம். மிதுனம் - காதலிணைப்
பறவை முதலியன.

 (510)