1647. கஞ்சுகி மாந்தருங் காவல் முதியாரும்
மஞ்சிவர் சாரல் மணியறையும் வார்பொதும்பும்
1துஞ்சு மழைதவழுஞ் சோலைகளுஞ் 2சோதித்துச்
செஞ்சொ லவர்போய்த் திசைகாவல் கொண்டாரே.
 
     (இ - ள்.) கஞ்சுகி மாந்தரும் - மெய்ப்பை புக்க ஏவலரும், காவல் முதியாரும் -
காவற்றொழில் பூண்ட முதுமையாளரும், மஞ்சு இவர் சாரல் - முகில் தவழும்
தாழ்வரைகளையும், மணியறையும் - மணிகளானியன்ற உச்சியினையும், வார்பொதும்பும் -
நீண்ட குறுங்காடுகளையும், துஞ்சு மழை தவழும் - தங்கிய முகில்கள் தவழாநின்ற,
சோலைகளும் - பொழிலிடங் களையும், சோதித்து - ஆராய்ந்து, செஞ்சொலவர்போய் -
செவ்விய சொல்லையுடைய அம்மாந்தர்கள் சென்று, திசைகாவல் கொண்டாரே - திக்கு
களிடத்தே காவற்றொழிலை மேற்கொள்வாராயினர், (எ - று.)

     அப்பொழிலைக் காக்கும் காவலர், மணியறையும், பொதும்பும், சோலைகளும்
சோதித்துப் போய்த் திசைகளிலே காவலாக அமைந்தனர், என்க.

(517)