வண்டுகள் மயக்கமுந் தெளிவும்

165. அந்தழை யசோகம் பூத்த வழகுகண் 1டவாவி னோக்கி
வெந்தழற் பிறங்க லென்று வெருவிய மறுவி றும்பி
கொந்தவிழ்ந் துமிழப் பட்ட குளிர்மதுத் திவலை தூவச்
செந்தழற் 2பிறங்க லன்மை தெளிந்துசென் றடைந்த வன்றே.
 

     (இ - ள்.) அம்தழை அசோகம் பூத்த அழகு கண்டு - அழகிய இலைகளையுடைய
அசோகமரம் மலர்ந்த அழகிய தோற்றத்தைக் கண்டு; அவாவின்நோக்கி் - மொய்த்தற்காக
விருப்பத்துடன் பார்த்து நெருங்கிவந்து; வெந்தழல் பிறங்கல் என்று வெருவிய - கொடிய
எரிமலையென்று அஞ்சிய; மறுவில் தும்பி - குற்றமற்ற வண்டுகள்; கொந்து அவிழ்ந்து
உமிழப்பட்ட குளிர்மதுத் திவலை தூவ - அப்பூங்கொத்துக்கள் இதழ்முறுக்கு விரிதலால்
சொரியப்பெற்ற குளிர்ச்சியான தேன்துளிகளைச் சிந்துதலானே; செந்தழல் பிறங்கல் அன்மை தெளிந்து - அஃது எரிமலையல்லாத் தன்மையை நன்குணர்ந்து; சென்று அடைந்த -
அம்மலர்களில் சென்று மொய்க்கலாயின. (எ - று.) அன்றே - ஈற்றசை.

     செந்நிறமுள்ள மலர்கள் நிரம்பப்பூத்த மிகவுயர்ந்த அசோகமரத்தைச் செந்நிறமான
எரிமலை என்று வண்டுகள் முதலில் மாறுபடவுணர்ந்து அவற்றில் மொய்த்தற்கு அஞ்சின.
பின் அம்மலர்கள் தேன் துளிகளைச் சிந்துதலைக் கண்டு எரிமலையன்று என்று தெளிந்து
அதன்கண் மொய்க்கலாயின; என்பதாம். அவ்வண்டுகள் பிறவுயிர்களைப் போலக்
கள்ளங்கபடு அற்றவென்பார், “மறுவில் தும்பி“ என்றார்.
 

( 47 )