(இ - ள்.) செங்களி தோய்ந்து - செம்பஞ்சுக்குழம் பூட்டப் பட்டு, சிவந்த உள் சீறடியார் - சிவந்த சிறிய உள்ளடியையுடைய மகளிர்களின், வாள்முகத்தின் - ஒளியுடைய முகத்தின், தங்கு ஒளிபாய்ந்து உள் எறித்த - நிலைபெற்ற ஒளிசென்று தன் அகத்தே பிரதிபிம்பிக்கப்பெற்ற, தண் காந்தம் மாமணி குளிர்ந்த சந்திரகாந்தம் என்னும் சிறந்த மணி, திங்கள் ஒளி கருதி - அம்முகவொளியைத் திங்களின் நிலவொளியாக எண்ணி, தெண் நீர்த்துளி சிதற - தான் அவ்வொளிக்கெதிரே தெளிந்த நீர்த்துளியைச் சிதறிற்றாக, மங்குல் மழை அயிர்த்து - அம்மகிளிர்கள் அந்நீர்த்துளிகளை முகில்கள் துளிக்கும் மழைத்துளி போலும் என்று ஐயுற்று, வார்பொழிலின் வாய் அயலுள்ள நீண்ட பொழிலினூடே புகுந்து, மறைவார் - அம்மழைக்கு மறைந்து கொள்வார், (எ - று.) தேவியரின் திருமுகவொளியைத் திங்கள் ஒளியாகக் கருதிச் சந்திர காந்தம், நீர்த்துளியை உதிர்த்ததாக, அத்துளிகளை மழைத்துளிகளாகக் கருதித் தேவியர் பொழிலிடத்தே சென்று மறையலாயினர் என்க. |