இதுவுமது | 1655. | வம்பத் திருளுருவின் மாணிக்கச் செங்கதிரை அம்பொற் சிலம்பி னசோகந் தளிரென்று தம்பொற் சுடராழி மெல்விரலாற் றைவந்து கொம்பிற் குழைந்து குறுமுறுவல் கொண்டகல்வார். | (இ - ள்.) வம்பத்திரள் உருவின் - புதுமைமிக்க திரண்ட உருவினை யுடைய, மாணிக்கச் செங்கதிரை - மாணிக்க மணியின் சிவந்த சுடரை, அம்பொன் சிலம்பின் அசோகந்தளிர் என்று - அழகிய அப்பொன் மலைக்கணணேயுள்ள அசோகமரத்தின் தளிர் என்று கருதி, தம் பொன்சுடர் ஆழிமெல்விரலால் - தம்முடைய பொன்னாலாய ஒளியுடைய ஆழியணிந்த மெல்லிய விரல்களாலே, தைவந்து - தடவிப்பார்த்து, கொம்பிற்குழைந்து - நாணமுற்றுப் பூங்கொம்புபோல ஒல்கி, குறுமுறுவல்கொண்டு - புன்முறுவல் பூத்து, அகல்வார் - அயலிலே செல்லா நிற்பர், (எ - று.) சிலமகளிர் புதுமைமிக்க திரண்ட உருவினையுடைய மாணிக்க மணியின் செவ்விய கதிரை, அசோகந்தளிர் என்று கருதித் தம் விரலாலே தடவிப் பார்த்து, அல்லாமை கண்டு நாணிக் குறுமுறுவல் கொண்டு புறத்தே போயினர் என்க. | (525) | | |
|
|