(இ - ள்.) சிறுகுயில் - சிறிய வடிவமுடைய குயில்கள்; மாஞ்சினை கறித்த துண்டம் துவர்த்தலின் - மாமரத்தின் கிளைகளில் தம்மாற் கடித்து உண்ணப்பட்ட பகுதிகள் துவர்ப்படைந்ததனால்; அவற்றைவிட்டு; மருங்கு நீண்ட பூஞ்சினை முருக்கஞ் சோலைப்பூக்கள் வாய் தீம் சவைஆர மாந்தி - பக்கத்தில் நீண்டு வளர்ந்துள்ள அழகிய கிளைகளையுடைய முருக்கமரச் சோலைகளிலுள்ள மலர்களை வாயில் இனிய சுவைமிகும்படியாகவுண்டு; மிழற்றுகின்ற - இனிமையாகக் கூவுகின்றன; செல்வரேனும் - பொருளுடையவர்களாக விருந்தாலும்; தாம் சுவை திரிந்த பின்றை - அவர்கள் தமக்குரிய இனிய பண்பினின்றும் மாறுபட்ட பிறகு; சார்பவர் இல்லை அன்றே - அவர்களிடஞ் செல்வார் எவரும் இலராவரன்றோ? (எ-று.) குயில்கள் செழித்து வளர்ந்த மாமரத்தின் கிளைகளில் இனிய இளந்தளிர்களை உண்டு திரிகின்றன. அத்தளிர்கள் முதிர்ந்து இனிமை மாறித் துவர்ப்பை யடைந்ததனால், அவற்றைவிட்டு அண்மையில் நீண்டு வளர்ந்துள்ள முருக்கமரங்களின் கிளைகளில் உள்ள மலர்களை உண்டு இனிதாகக் கூவுகின்றன. இந்தச் சிறப்புப் பொருளைச் செல்வம் உடையார் இனியராயிருக்கையில் அவரைச் சார்ந்துவாழும் பலரும் அச்செல்வர் இனிமைமாறின் அவரைவிட்டு நீங்கி அகல்வர் என்னும் பொதுப்பொருள் கொண்டு விளக்கினார். இதனை அணி நூலார் வேற்றுப்பொருள்வைப்பணி என்பர். மாஞ்சினை - மரப்பெயர் முன்னர் இனமெல்லெழுத்து வரப்பெற்றது. பூக்கள் வாயார மாந்தி என்பதற்குப் பூவிலுள்ள தேனை மிகுதியாகக் குடித்து என்றுரைப்பினும் அமையும். |