(இ - ள்.) நாண்தனால் நிறைந்த நங்கை - நாண் என்னும் பெண்மைக் குணம் நிறைந்த சுயம்பிரபை, நடுங்குபு நுடங்கி நோக்கி - அஞ்சி நடுங்கி ஒல்கி நாற்றிசையினும் பார்த்து, அடிகள் யாண்டையார் என்னும் ஆயிடை - நம்மடிகளார் எவ்விடத்துள்ளார் என்று கூறும் அப்பொழுதே, அஞ்சல் பொன்னே - அஞ்சேல் திருமகளே, ஈண்டையேன் - யான் இவ்விடத்தே தான் உளேன், பட்டது என்னை என்று - இங்கே என்ன நிகழ்ந்தது என்று வினவியவனாய், சென்று அணுகினான் - அத்தேவிபாற் சென்றெய்தினான், (அவன் யார் எனில்) வேண்டிய விளைத்துக் கொள்ளும் - தாம் வேண்டியவற்றை வேண்டியபடி விளைவித்துக் கொள்ளுதற்குக் காரணமான, விழுத்தவம் - சிறந்த தவத்தினை, விளைத்து வந்தான் - முற்பிறப்பில் ஆற்றி வந்து தோன்றியவனாகிய திவிட்டன், (எ - று.)“வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவ மீண்டு முயலப் படும்“ (திருக். செய். 265)என்னும் குறட்கருத்தை ஈண்டுக் காண்க. கோப் பெருந்தேவி நடுங்கி நோக்கி அடிகள் யாண்டையார் என்ன, நம்பி ஈண்டையேன் என்னை பட்டதென்று அணுகினான் என்க. யாண்டையார் - எவ்விடத்தார், ஈண்டையேன் - இவ்விடத்தேன். |