ஞாயிறு உச்சியை அடைதல் | 1668. | மங்கையர் தம்மை யெல்லா மணிவண்ணன் மருட்டி மற்றிக் கொங்கவிழ் குளிர்கொள் சோலைக் 1குன்றினின் றிழிந்த போது வெங்கதிர் விரிந்த வெய்யோன் விசும்பிடை 1வெதும்பி வேவச் செங்கதிர்க் கூடங் குத்திச் 2செந்நடு வாக நின்றான். | (இ - ள்.) மங்கையர் தம்மையெல்லாம் - தன் தேவியராய அம்மகளிரையெல்லாம், மணிவண்ணன் - திவிட்டன், மருட்டி - இவ்வாறு அச்சுறுத்தி, மற்றுஇக் கொங்கு அவிழ் குளிர்கொள் சோலை - இந்த மணங்கமழும் குளிர்ந்த சோலைசூழ்ந்த, குன்றினின்று இழிந்தபோது - செய்குன்றிலிருந்து இயங்கியபொழுது, வெங்கதிர் விரிந்த வெய்யோன் - வெவ்விய கதிரை விரித்த கதிரவன், விசும்பு இடைவெதும்பி வேவ - விண் தன் இடமெல்லாம் வெப்பமுற்று வேகும்படி, செங்கதிர்க்கூடம் குத்தி - தனது செவ்விய கதிராலே கூடாரம் அடித்து, செந்நடுவாக நின்றான் - அவ்விசும்பின் செவ்விதாய உச்சியிலே நிற்பானாயினன், (எ - று) செந்நடு - சரியான நடுவிடம். நம்பி யானையாலே தேவியரை மருட்டிக் குன்றினின் றிழிந்தபோது ஞாயிறு உச்சியிலே நின்றான் என்க. கூடம் - சம்மட்டி. | (538) | | |
|
|